Thursday, January 23, 2014

சமயங்களும் சம்பிரதாயங்களும் பாகம் - 2

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் படைப்பது ஏன்?

 

ரொம்ப நாளாகவே என்னுள் இருந்த ஒரு கேள்வி. இந்துக்கள் எந்த ஒரு பூஜை செய்தாலும் கண்டிப்பாக அதில் வாழைப்பழம் இடம்பெறும். பூஜையில் வாழைப்பழம் படைத்து அதில் ஊதுவர்த்தி கூட சொருகி வைப்பார்கள். வேறு எந்த பழமும் பூஜை செய்யும் போது வாழைப்பழம் அளவிற்கு முக்கியத்துவம் பெறுவதில்லை. ஏன் வாழைப்பழம் மட்டும் படைக்கிறார்கள் என்ற கேள்வி ரொம்ப நாட்களாகவே என்னுள் இருந்தது. என் அம்மாவிடம் அதை குறித்து கேட்டால் "என் முன்னோர்கள் எனக்கு சொல்லி கொடுத்ததை நான் செய்கிறேன் அவ்வளவு தான் வேறு எதுவும் எனக்கு தெரியாது" என்று கூறிவிட்டார்கள். பிறகு அதே மாதிரி வேறு ஒரு  சந்தேகம். எதற்கு இந்துக்கள் கடவுளை வணங்கும் போது தேங்காய் உடைக்கிறார்கள்? என்று.

இந்த கேள்விக்கு ஒரு சிலர் கடவுள் மனம் வெள்ளையாக இருக்கும் அதனால் தான் தேங்காய் உடைக்கிறார்கள் என்று கூறினார்கள். கிறிஸ்தவ பைபிளிலும் யகோவா கடவுளுக்கு தேங்காய் உடைப்பதாக உள்ளது என்று ஒரு கிறிஸ்தவர் கூறினார். பிறகு இணையத்தில் தேடும் போது எனக்கு சரியான விடை கிடைத்தது. அதை கீழே காணலாம். 

இந்துக்கள் எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டு விட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.


                                     

அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். 

No comments:

Post a Comment