Monday, March 25, 2013

கடவுளை அறிவோம்...


கடவுளே நீ என்னோடு பேச மாட்டாயா..?

ஒருவன் "கடவுளே.., நீ என்னோடு பேச மாட்டாயா..?" என்று வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவியது. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.. 

மீண்டும் அவன் உரத்த குரலில் கத்தினான்..!

"கடவுளே.., நீ என்னோடு பேச மாட்டாயா..?"

இப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது... அதையும் அவன் கவனிக்கவில்லை..!

''கடவுளே.., உன்னை நான் இப்போதே பார்க்க வேண்டும்..!'' என்று இப்போது அவன் வேண்டினான்.

அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை..!

''கடவுளே.., எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டுவாயா..?'' என்று பிரார்த்தனை செய்தான்.

அப்போது அருகில் ஒரு குழந்தை சிரிக்கும் சத்தம் கேட்டது.. அதையும் அவன் கவனிக்கவில்லை..!

"கடவுளே.., நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ள என்னை நீ தொடுவாயா..'' என்று கூவினான்.

அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணாத்திப் பூச்சி வந்து இருந்தது. அவன் அதை கையால் தட்டிவிட்டு..!

இறுதில் "நீ இல்லவே இல்லை..!" என்று கூறிவிட்டு போனான்.

"இயற்கையை நேசிப்போம் நண்பர்களே இயற்கையாகிய காற்று, வானம், நீர், நெருப்பு, நிலம், இல்லையேல் இந்த மண்ணில் 
ஏது 
உயிரினம்"


Friday, March 22, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 2


சென்ற பதிவில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம். சரி இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு மற்றும் பூர்வீகம் பற்றி இனி காண்போம். 

சிந்து-சமவெளி நாகரீகம்:


கி.மு.3500 ஆண்டுகளில் சிந்து நதிக்கரையில் வளர்ந்த சிந்து சமவெளி நாகரீகம், உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றாக திகழ்ந்தது. நன்கு திட்டமிடப்பட்ட நகர வாழ்வை கொண்ட உயர்ந்த நாகரீகமாக அது விளங்கி வந்துள்ளது. ஆரியர்கள் வருகைக்கு முன்பு இந்நாட்டின் ஆதி மக்களான திராவிடர்களின் நாகரீகமாக அது குறிப்பிடப்படுகிறது. மற்ற மனித கூட்டங்கள் நாடோடிகளாகவும், காட்டுமிராண்டிகளாகவும் வாழ்ந்து வந்த அந்த காலகட்டத்தில் சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள், நகர நாகரீகத்தை கொண்டு வாழ்ந்து வந்தனர். அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வீடுகள்பருத்தி-கம்பளியாலான உடைகள்; தங்கம், வெள்ளி, தாமிரம் உலோகங்களால் விலையுயர்ந்த அனைத்து வகையான அணிகலன்களையும் முத்து, மாணிக்கம், பவழம் போன்றவைகளை ஆபரணங்களில் பதித்து அணிந்து வந்தனர்.

மண்பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்தினர். வனவிலங்குகள் பதித்த இலச்சினையும் நாணயங்களில் பதித்து வைத்திருந்தனர். இந்தியாவின் பிற பகுதிகளோடும், ஆசியாவின் பல பகுதிகளோடும் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். நிலத்தை உழுது பயிரிட்டு கோதுமை, பார்லி, பருத்தி போன்ற பயிர்களை பயிரிட்டனர். குயவர், நெசவாளர், தச்சர், கொத்தனார், கொல்லர், பொற்கொல்லர், கல்லுடைப்போர் போன்றோரும் தங்கள் தொழிலை செய்து வந்தனர்.

பெண்தெய்வ வழிபாடு, இயற்கை தெய்வங்களான நாக வழிபாடு-மர வழிபாடு-விலங்கின வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் அவர்களிடையே காணப்பட்டது. இப்படிப்பட்ட சிறப்பு வாழ்ந்த சிந்து சமவெளி நாகரீகம் உலகின் மிக சிறந்த நாகரீகங்களான சுமேரியா-மெசபடோமியா நாகரீகங்களுடன் இணைத்து பார்க்கக்கூடிய ஒரு நாகரீகமாகும். 

ஆரியர் நாகரீகம்:


சிந்து சமவெளி நாகரீகத்தை தொடர்ந்து ஆரியர் நாகரீகம் வளர்ந்தது. இது கி.மு.1500களில் சிந்து நதிக்கரையில் பரவியது. திராவிடர்களின் வீழ்ச்சியே ஆரியர்களின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. ஆரிய நாகரீகம் திராவிட நாகரீகத்திலிருந்து முழுதும் மாறுபட்டிருந்தது. இவர்கள் நாடோடிகளாக இருந்து  பிறகு கிராம வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். குதிரைகளின் பயனை உணர்ந்து அதன் மூலம் போரிடுவதில் சிறந்து விளங்கினர். ஒரே நேரத்தில் அவர்களுடைய குடியிருப்புகள் அமையவில்லை. பற்பல குழுக்களாக பல்வேறு காலக்கட்டங்களில் அவர்களின் குடியேற்றங்கள் அமைந்திருந்தன. ஆரிய நாகரீகம், ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றை இயற்றி இந்திய சமுதாயத்தை ஒரு மத ரீதியிலான சமுதாயமாக மாற்றி அமைத்து, மக்களிடம் இருந்த தொழிற் பிரிவுகளை மதத்தை முன் வைத்து; நிரந்தர ஜாதி பிரிவுகளாக மாற்றியமைத்தது. படைப்பு கடவுளான புருஷா அல்லது பிரம்மாவின்  முகத்தில் (நெற்றி) பிறந்தவன் பார்ப்பணன் என்றும்;தோளில் பிறந்தவன் ஷத்ரியன் என்றும், தொடையில் பிறந்தவன் வைஷ்யன் என்றும்;பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்றும் சதுர் வர்ண முறையை வகுத்து மனுவின் மூலம் [ஆரியர்களின் சமய சட்டங்களை தயாரித்தவன்] அதற்கு புனிதத் தன்மையையும் சட்ட அந்தஸ்தையும் கொடுத்து, மீறுபவர்களுக்கு தண்டனையும் அளித்து இந்த மக்கள் பிரிவினையை நிரந்தரமாக்கியது. இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்ணர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் மாற்றப்பட்டனர்.

(தொடரும்...)

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 1



Sunday, March 17, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 1



உலக வரலாற்றில் வளர்ந்து நிற்கும் எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் உயர்விற்கும், சிறப்பிற்கும் ஊன்றுகோலாய் விளங்கிய பூர்வ குடிமக்கள் புறந்தள்ளப்பட்டு அரசியல், சமூக, கலாச்சார ரீதியில் அவர்கள் ஒதுக்கப்பட்டு இரண்டாந்தர குடிகளாக மாற்றப்பட்டுள்ள நிலைமைகள் தான் நிகழ்ந்துள்ளன. உதாரணம் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள அமெரிக்காவையும், ஜப்பானையும் எடுத்துக்கொள்ளலாம். கொலம்பஸ் கால் வைத்த 500வது ஆண்டை கொண்டாடிய அமெரிக்க, தங்கள் நாட்டின் பூர்வ குடிகளான செவ்விந்தியர் தங்கள் வளங்களையும், சுதந்திரத்தையும் இழந்து எங்கோ ஒதுங்கிக் கிடப்பதை மறந்து விட்டது.

ஜப்பான் நாட்டு வளர்ச்சிக்கு ஊன்றுகோல் போல் வாழ்ந்திட்ட "புராக்கு" இனத்தினர் இந்தியாவின் தீண்டத்தகாதவர்களை போல தங்கள் உரிமைகளையும், நிலைகளையும் இழந்து காட்டு பகுதிகளில் புறந்தள்ளப்பட்டுள்ளனர். இதுவே தான் இன்றைய இந்தியாவின் நிலை. இந்த நாட்டின் தொன்மை வாழ்ந்த நாகரீகத்திற்கும், வளமைக்கும் வித்திட்ட பூர்வ குடிகளான; மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட  ஆதி திராவிட (தலித்) மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, கொடுமையாக நடத்தப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வரலாறும், பண்பாடும், புகழும் மறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட (தலித்) மக்களின் பூர்வீகம் மற்றும் வரலாற்றை இனி காண்போம்.

அதற்கு முன் பொதுவாக தாழ்த்தப்பட்டவர்கள் (இது நம் நாட்டில் உள்ள ஜாதியை குறிப்பிடவில்லை) எப்படி உருவாகி இருப்பார்கள் என்பதை அறிய ஒரு சிறிய கற்பனை கதைக்கு செல்வோம். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிட்டுள்ள முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் அவர்களின் முதல் இரு புதல்வர்கள் காயீன் மற்றும் ஆபேல். இவர்களில் ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாக இருக்கிறான். காயீன் நிலத்தை பயிரிடுபவனாக இருக்கிறான். இவர்கள் இருவரும் தங்களுடைய விளைச்சலின் காணிக்கையை ஆண்டவருக்கென்று படைக்கிறார்கள் அதில் ஆபேல் அவர் மேய்த்த ஆடுகளின் கொழுமையான சிலவற்றை படைக்கிறார். காயீன் தன்னுடைய பயிரில் கிடைத்த விளைச்சலை காணிக்கையாக படைக்கிறார்.  ஆபேலின் காணிக்கையை ஆண்டவர் அங்கீகரிக்கிறார். காயீனின் காணிக்கையை ஆண்டவர் நிராகரிக்கிறார். இதற்கு பல காரணங்களை பாதிரிமார்கள் கூறுகிறார்கள். ஆபேல் நிறைவாகவும் காயீன் குறைவாகவும் காணிக்கை கொடுத்ததாக சிலரும், ஆபேல் ஆட்டின் உண்மையான கொழுமைகளை கொடுத்ததாகவும் காயீன் தன்னுடைய விளைச்சலில் கரிக்க நெல் எனப்படும் உபயோகப்படாத ஒன்றை கொடுத்ததாக சிலரும், இன்னும் ஒரு சிலர் அந்த காலத்தில் கால்நடைகளின் விளைச்சலையே ஆண்டவர் விரும்பினார் எனவும், நாகரீகமடைந்த விவசாய விளைச்சலை அவர் விரும்பவில்லை எனவும் அதனாலேயே ஆபேலின் காணிக்கையை ஆண்டவர் நிராகரித்ததாகவும் கூறுகின்றனர். பின்னர் காயீன் ஆபேலை கொன்றுவிடுகிறான். சரி இங்கு ஆண்டவரிடம் ஆசிர்வாதத்தை பெற்றவன் ஆபேல், ஆசீர்வாதம் பெறாதவன் காயீன். ஒருவேளை ஆபேல் காயீனால் கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் இருவரது தலைமுறைகளிலும்  ஆபேலின் தலைமுறையே ஆண்டவரின் ஆசிர்வாதத்தோடு சகல நன்மைகளோடும் இருந்திருக்கும், ஆண்டவரின் ஆசீர்வாதம் பெறாத காயீனின் தலைமுறை ஆபேலைக்காட்டிலும் தாழ்ந்ததாகவே இருந்திருக்கும். ஆசீர்வாதம் பெற்ற ஆபேலின் தலைமுறை காயீனின் தலைமுறையை ஆண்டுக்கொண்டிருக்கும். இப்படித்தான் முதல் தாழ்த்தப்பட்டவன் உலகத்தில் உருவாகிறான். இந்த கற்பனை கதைக்கும் இன்று இந்தியாவில் இருக்கும்   தாழ்த்தப்பட்டோருக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை.              அவர்கள் எவ்வாறு வந்தேறிகளால் தாழ்த்தப்பட்டனர் என்பதை பின்னர் காண்போம்.

மற்றுமொரு குட்டி கற்பனை கதையுடன் இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன், ஒரு தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒருவன் ஏமாளி மற்றொருவன் ஏமாற்றுக்காரன். அண்ணன் தம்பியாகிய இருவருக்கும்  எந்த ஒரு தின்பண்டமாக இருந்தாலும் சமமாக கொடுப்பார்கள் அவர்கள் பெற்றோர். இதில் தம்பியானவன் தன்னுடைய தின்பண்டத்தை விரைவில் சாப்பிட்டுவிட்டு அண்ணனிடம் பங்கு கேட்பான். அண்ணனும் தம்பியின் மீதுள்ள பாசத்தால் அவனுக்கு தன்னிடமிருந்து கொஞ்சம் தின்பண்டத்தை கொடுப்பான். சின்ன வயதில் அண்ணனிடம் ஏமாற்றி தின்ற தம்பியின் ஏமாற்று வித்தை பெரியவனாக வளரும் வரை தொடர்கிறது. ஒரு நேரத்தில் அண்ணனின் சொத்துக்களை கூட வஞ்சகத்தனத்தால் தம்பியானவன் பறிக்கிறான். ஏமாற்றி பறித்த சொத்துக்களுடன் தன்னுடைய சொத்துக்களையும் சேர்த்து தானும் தன்னுடைய பிள்ளைகளுடன் செல்வச்செழிப்போடு வாழ்கிறான். ஏமாளியாகிய அண்ணன் தனக்கு மீதமுள்ள சொத்துக்களுடன் கஷ்டத்துடனேயே தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்துகிறான். ஒரு நேரத்தில் தன்னுடைய குடும்ப கஷ்டத்தின் காரணமாக தன்  தம்பியின் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்து பிழைக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்களுடைய குடும்பம் தள்ளப்படுகிறது. தம்பி எஜமானாகவும் அண்ணன் தொழிலாளியாகவும் மாறுகிறார்கள். இப்படி தம்பியின் வம்சவாளியினர் அண்ணனின் வம்சாவாளினரை தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று கருதி அடக்கி ஆட்சி செய்கின்றனர். தம்பி குடும்பத்தினரின் பார்வையில்  அண்ணனின் குடும்பத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகின்றனர்.

(தொடரும்...)