Monday, October 28, 2013

மனிதனின் அடிப்படை பிரச்சனைகளும் போராட்டங்களும்-2


இரு வித தேடுதல்கள்...


மனிதன் எதையாவது நாடும்போது உண்மையில் அவன் நாடுவது அந்த பொருளை அல்ல. அந்த பொருளை அடைவதன் மூலம் தான் வேறுபடுவோம், மாறுபடுவோம் என்று நினைக்கின்றான். நாம் எப்படி இருக்கிறோமோ அது நமக்கு பிடித்தமாக இல்லை, நமக்கு பிடிக்கவில்லை. ஆதலால் எதையாவது செய்வதன் மூலம் இந்த நிலையை சரி செய்து விடலாம் என்று எண்ணுகிறோம். காலணியில் சிறு கல் மாட்டிக்கொண்டால், அதை எடுக்கும் வரை நமக்கு சங்கடமாக இருக்கிறது. அது போன்று நம் மனத்திலும் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருக்கிறது. அது போனாலன்றி அந்த உறுத்தல் போகாது. இந்த உறுத்தல் போவதற்காக, பிறர் என்னென்ன செய்கிறார்களோ அதை எல்லாம் நாம் சிறு மாறுதல்களுடன் செய்து பார்க்கிறோம். நமக்கு பிடித்தமான பொருட்களை சேகரிக்கிறோம். நமக்கு விருப்பம் இல்லாதவற்றை நீக்க முயல்கிறோம். இம்மாதிரி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாம் எல்லா தேடுதல்களையும்(pursuit-களையும்) ஆராய்ந்து பார்த்தால் அவையனைத்துமே இந்த இரு பிரிவுகளில் அடங்கிவிடும் என்பதை காணலாம். ஒன்று நாம் சேகரிக்க முயல்பவை. மற்றொன்று நாம் விலக்க அல்லது ஒதுக்க முயல்பவை. இவற்றை சமஸ்கிருதத்தில் பிரவ்ருத்தி என்றும், நிவ்ருத்தி என்றும் கூறுவார்கள். உதாரணமாக போரில் சேனை முன்னேறினால் பிரவ்ருத்தி எனலாம். திட்டமிட்டு பின் வாங்கினால் அது நிவ்ருத்தி ஆகும். இரண்டு வித தேடுதல்களும் நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கே ஆகும்.

மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக என்ன செய்கிறோம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். ஒருவன் தன் மகிழ்ச்சிக்காக ஒன்றை வாங்க விரும்புகிறான். மற்றவன் அதையே தன் மகிழ்ச்சிக்காக விற்க முயல்கிறான். மனிதன் எதை தன்னிடமிருந்து சேர்க்க முயல்கிறான் அல்லது தன்னிடமிருந்து தவிர்க்க முயல்கிறான் என்பது அவனுடைய மதிப்பீடுகளை பொருத்தது. ஆனால், சிலவற்றை சேர்க்க முயல்வதும், சிலவற்றை விலக்க முயல்வதும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். மேலும், மனிதனுடைய ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்று விருப்பமாக இருந்தது இன்று விருப்பமாக இருப்பதில்லை.  இன்று விருப்பமாக இருப்பது இருப்பது, நாளைக்கு விருப்பமாக இருக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் இவற்றின் பின் உள்ள ஆதார சுருதியான 'நான் நிறைவு பெற வேண்டும்' என்பது மாறுவதில்லை.

எதை மாற்றினாலும் ஆதார சுருதி மாறுவதில்லை...

ஒரு ஞானி வானையே கூரையாகவும், மரத்தடியே சிம்மாசனமாகவும், காய்ந்த இலைகளையே இரத்தின கம்பளமாகவும் கொண்டு வாழலாம். அவருக்கு ஆசைகள் ஏதுமில்லை. அவருடைய அடிப்படை தேவைகளும் மிகக்குறைந்தவையே.  பிச்சையெடுத்து பெற்ற சிறிது உணவையும் பக்கத்தில் இருக்கும் நாய்க்கு அவர் அளித்து விடலாம். ஆனாலும் அவர் மிகவும் மகிழ்ச்சி உள்ளவராக காணப்படுகிறார்.

ஒருவர் அவரை பார்த்து "நானும் எல்லாவற்றையும் துறந்து விடுகிறேன். பிறகு நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று நினைக்கிறார். அவர் உடனே தன் எண்ணத்தையும் செயல்படுத்துகிறார்; தன் மனைவி, மக்கள், வீடு, வேலை அனைத்தையும் துறந்து விடுகிறார். ஆயினும், அவர் அதனால் மகிழ்ச்சியுள்ளவராக மாறவில்லை. முன்பு மனதளவில் பிச்சைக்காரராக இருந்த அவர் இப்பொழுது உடலளவிலும் பிச்சைக்காரராகிவிடுகிறார். முன்பைவிட இன்னும் அதிக துக்கமுடையவராக ஆகிவிடுகிறார் அவ்வளவு தான்.

மற்றொருவர் சொல்கிறார் "நான் அதிகமாக சேகரித்தால், அதிக மகிழ்ச்சியுடன் இருப்பேன்" என்று. அதிகம் என்பது ஒரு ஒப்பீட்டுச்  சொல். அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். உதாரணத்திற்கு, பிளாட்பாரத்தில் வாழ்பவன் 'ஒரு குடிசை வீடு இருந்தால் நன்றாக இருக்கும்' என்று நினைக்கிறான். குடிசை இருப்பவன் 'ஒவ்வொரு நாளும் இரண்டு வேலை போதுமான சாப்பாடு கிடைத்தால் போதும்' என்று நினைக்கிறான். மற்றொருவன் "வெறும் சாப்பாடு மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா? ஒரு பெட்ரூம், பிளாட், ஒரு மொபைட் இவையாவது வேண்டாமா?' என்று நினைக்கிறான். பிறகு அது இரண்டு பெட்ரூம், பிளாட், ஸ்கூட்டர், கார் இப்படியாக கூடிக்கொண்டே போகிறது. சரி இவையெல்லாம் கிடைத்தாயிற்று. பிறகு என்ன? ஆதார சுருதி மாறவில்லையே!

வெவ்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்கிறான். எந்த இடத்திற்கு சென்றாலும், அதே மரங்கள், செடி கொடிகள், மலைகள், நதிகள், மக்கள், தெருக்கள், வாகனங்கள், கட்டிடங்கள் இடத்திற்கு இடம் வேறுமாதிரி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறன. அவ்வளவு தான்! ஆதலால் "எல்லாம் நான் பார்த்ததே தான்"  என்ற சலிப்பு வந்து விடுகிறது . இன்னும் வேறு எதாவது உள்ளதா என்று தேடச் சொல்கிறது. ஆதலால், பிரவ்ருத்திக்கு முடிவே இல்லை. ஆனால், 'நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதியோ மாறுவதில்லை.

இது தான் மனிதனின் அடிப்படை பிரச்சனை! மனிதன் தன்னிலே அமைதியுற்று, தன்னுடனே திருப்தியாக வாழ நினைக்கிறான். ஆனால், மனிதன் தன்னை குறைபாடுகள் உள்ளவனாக கருதும் போது அவன் திருப்தி அடைவது எப்படி? அமைதியுறுவது எப்படி? இந்த பிரச்னையை தீர்க்கும் வழி அறியாது மனிதன் பிரச்சனையிலிருந்து ஓடிவிட பார்க்கிறான். பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, சுற்றுலா போவது இவற்றின் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பி விடப்பார்க்கிறான். ஆனால், பிரச்சனையிலிருந்து தப்பி ஓடுவதால் பிரச்சனை தீர்வதில்லையே!!! ஆதலால், இந்த நிறைவின்மை என்ற பிரச்சனை பிரவ்ருத்தி, நிவ்ருத்தி இவற்றின் மூலம் தீர்வதில்லை.

வாழ்வின் குறிக்கோள்...

இப்படி நிறைவின்மை, குறைபாடுகள் இவற்றுடன் நாம் மன இறுக்கங்கள் கூடிய வாழ்வை வாழ்கிறோம். வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் எண்ணலாம். காரணம், நம் மனதில் வசதிகளுக்கு மதிப்பு இருப்பது தான். உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உண்மையில் பெரிய வேறுபாடு இல்லை. உள்ளவர்கள் வசதியாக துயரப்படுகிறார்கள். இல்லாதவர்கள் வசதி இல்லாமல் துயரப்படுகிறார்கள். அவ்வளவு தான்! ஆயினும், அனைவரும் தான் இருப்பதிலிருந்து வேறுபட வேண்டும், மாறுபட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தான் எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை.

இந்த பிரச்னையை தீர்ப்பதே வாழ்வின் குறிக்கோளாகும். இதை நாம் எளிதில் ஒதுக்கி விட நாம் முடியாது. உதாசீனப்படுத்த முடியாது. உண்மையில் நாம் வேண்டுவது இவற்றில் எதுவுமல்ல. 'என்னிடமே நான் திருப்தியுற விரும்புகிறேன்' - இதுதான் நாம் விரும்புவது. நாம் பெற்றுள்ள அநுபவங்கள் இதை தான் நமக்கு காட்ட வேண்டும். இதுதான் பிரச்சனை என்பதை அறிந்து கொண்டால், உண்மையில் நாம் வாழ்க்கையில் எதை தேடவேண்டும் என்பது தெரியும். வாழ்க்கையில் அடைய வேண்டியது என்ன என்று தெரிந்தால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகிறது.

கீதை இந்த அடிப்படை பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது...


கீதையை படித்தறிவதால் வாழ்வில் நமக்கு என்ன லாபம் என்று கேட்கப்படுகிறது. கீதை நமக்கு உணவு, உடை கொடுப்பதில்லை. அது மக்கள் தொகை பெருக்கத்தை எப்படி நிறுத்துவது, சுற்றுபுரம் மாசுபடுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஏனெனில் இவை தற்காலிக பிரச்சனைகள் - Topical Problems. கீதை மனிதனின் தற்காலிகப் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில்லை. ஆனால் அது மனிதனின் அடிப்படை பிரச்சனையான நிறைவின்மை என்பதற்கு விடையளிக்கிறது. ஆனால், ஒன்று! அடிப்படை பிரச்சனை தீர்க்க உதவுவதன் மூலம் அது நம் அன்றாட பிரச்னையை சமாளிக்க நமக்கு உதவுகிறது.

அன்றாட பிரச்சனைகள் வரும், போகும். காலையில் ஒன்று வரும், மாலையில் ஒன்று வரும். கிருஷ்ணர், வியாசர் உள்பட எவருமே தற்காலிக பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததில்லை. இம்மாதிரி பிரச்சனை இல்லாமல் இருந்தால் சவால்கள் இல்லாமல் வாழ்க்கை சலித்துவிடும்.

அவர் கிராமத்திலேயே பெரிய மனிதர். அந்த கிராமத்து இளைஞர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். அதற்காக ஒரு கால்பந்து மைதானத்தையும், அந்த விளையாட்டுக்கு வேண்டிய உபகரணங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து ஒரு நல்ல நாளில் கிராமத்து இளைஞர்களிடையே கால்பந்து ஆட்டத்தை துவக்கி வைத்தார்.

அந்த ஆட்டத்தை காண வந்திருந்த அவருடைய வயதான தந்தை "இவ்வளவு பணம் செலவழித்து இந்த மைதானத்தை எல்லாம் சீரமைத்த நீ, பந்து விசயத்தில் இப்படி கருமித்தனம் பண்ணி இருக்க கூடாது. இருபத்திரண்டு பேர்கள் ஒரே பந்துக்கு போட்டப்போட்டி இடும்படி செய்துவிட்டாயே! ஆளுக்கு ஒரு பந்து கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவாய்? பணம் பற்றவில்லை என்றால் என்னிடம் கேட்கக்கூடாதா?" என்றாராம்.

பந்து ஒன்று தான் இருக்க வேண்டும். அதை இருபத்திரண்டு பேர்கள் துரத்தி ஓட வேண்டும் அப்பொழுது தான் அது விளையாட்டு! சவால்! அப்பொழுது தான் அது விருவிருப்பாகவும் இருக்கும். அம்மாதிரி தான் வாழ்க்கை என்னும் விளையாட்டும்! அவ்வப்போது பிரச்சனைகள் இருக்க வேண்டும். அவை நமக்கு சவாலாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு தேசத்திற்கும் சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனைகள் நேரிடலாம். ஆனால், மனம் இருந்தால், அனுபவங்களிலிருந்து கற்கக்கூடிய புத்தி இருந்தால், பிரச்சனைகளை தைர்யமாக எதிர் கொள்ளலாம்.

நம் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டால், எல்லா தற்காலிக பிரச்சனைகளையும் எதிர்கொள்வது எளிதாகிறது. இல்லாவிடில் அன்றாட பிரச்சனைகள் நாம் எதிர்கொள்ளும் முறையால் புதிய புதிய பிரச்சனைகள் உருவாக்கி விடுவோம். "நானே குறைகள் உள்ளவன்" என்று நினைக்கும் ஒருவரால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்? தன்னிறைவு உள்ள ஒருவரால் தான் மற்றவர்களுக்கு உதவ முடியும், சேவை செய்ய முடியும்.

இந்த நிறைவின்மை என்ற அடிப்படை பிரச்சனை மனித இனம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது. கீதையில் இது தான் அர்ஜுனனின் பிரச்சனை. அவன் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவனும், பல சவால்களை அனாயாசமாக சமாளித்து வீர, தீர செயல்களை புரிந்தவனும் ஆவான். ஆனால், திடீரென தன் அடிப்படை பிரச்சனை பூதகரமாக வளர்ந்து தன்னை விழுங்கி விடுவது போல் ஓர் இயலாமையை உணர்ந்தான். பகவான் கிருஸ்ணர் அவனுக்கு பூரணமான ஆத்மாவின் தத்துவத்தை உரைத்தார். அதை அறிந்த அவன், தான் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டதை உணர்ந்தான். இது தான் கீதை நமக்கு காட்டும் வழி.

பகவத்கீதை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கோ, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கோ மட்டும் உரியதல்ல. யார் யாருக்கு வாழ்க்கையில் போராட்டங்கள் சமாளிக்க வேண்டி இருக்கிறதோ, அவற்றை சமாளிக்கும் போது எப்பொழுதும் ஒரு அடிப்படை நிறைவின்மையை உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் கீதை உரியது. யார் யார் இந்த அடிப்படை நிறைவின்மை உணர்வு தமக்கு உள்ளது என்று அறிந்து அதிலிருந்து விடுபட விரும்புகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் கீதை உரியது. வரப்போகும் பதிவுகளில் கீதை எப்படி இந்த அடிப்படை பிரச்னைக்கு தீர்வை கூறுகிறது என்பதை காணலாம். இதன் முடிவில் நீங்களும் அர்ஜுனன் போன்று "என் மோஹம் போயிற்று" என்று கூறுவீர்கள். இது தான் கீதை அளிக்கும் வாக்குறுதி.
தொடரும்...

குறிப்பு:ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதிய பகவத்கீதையின் ஸராம்சம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

மனிதனின் அடிப்படை பிரச்சனைகளும் போராட்டங்களும்-1

மனிதனின் பிரச்சனைகள்...

மனிதனின் மனம் எப்பொழுதும் குழப்பங்களையும், போராட்டங்களையும் உடைய ஒரு போர்க்களமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ள இடத்தில் தான் குழப்பமும், போராட்டமும் தோன்ற முடியும். மிருகங்களின் மனதில் குழப்பமோ, போராட்டமோ தோன்றுவதில்லை. அவை சைவ உணவை சாப்பிடலாமா இல்லை அசைவ உணவை சாப்பிடலாமா என்று தம்மை குழப்பி கொள்வதில்லை. இயற்கையில் அந்த இனம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ எப்படி Program செய்யப்பட்டிருக்கிறதோ அப்படியே அவை செயல்படுகின்றன. அவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே இந்த அறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் போது தான் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்கள் ஏற்படும். இந்தப் பள்ளியில் சேர்க்கலாமா? வேறு பள்ளியில் சேர்க்கலாமா? இந்த பாடத்தை எடுத்துக் கொள்ளலாமா, வேறு பாடத்தை எடுத்துக்கொள்ளலாமா? மேலே படிக்கலாமா? வேண்டாமா? இந்த வேலையை செய்யலாமா அல்லது வேறு வேலையை தேடலாமா? திருமணம் செய்துக்கொள்வதா, வேண்டாமா? சிறிது தள்ளி போடலாமா? ஸ்கூட்டர் வாங்கலாமா? சைக்கிள் வாங்கலாமா? அதிலும் 'யுனிகான்' வாங்கலாமா, 'பல்சர்' வாங்கலாமா? இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் திரும்பத் திரும்ப சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு பெரிய தொழிலதிபர் புதிய தொழிலை தொடங்கலாமா, இருப்பதையே இன்னும் விஸ்தரிக்கலாமா? என்று குழம்பலாம். வீட்டிலுள்ள பெண்மணிகள் "இன்று வெண்டைக்காய் சமைப்பதா? கத்திரிக்காய் சமைப்பதா?" என்று குழம்பலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் இவ்வித குழப்பங்களும் போராட்டங்களும் தினந்தோறும் உள்ளன. ஒவ்வொரு மனமும் ஒரு யுத்த களமாக இருக்கிறது.

அடிப்படை பிரச்சனை...

பகுத்தறியும் சக்தியும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிக அரிய வரப்பிரசாதமாகும். ஆனால் இந்த வரமே சாபமும் ஆகும். காரணம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் குழப்பத்தையும், போராட்டத்தையும் தவிர்க்க முடியாது. போராட்டங்களும், குழப்பங்களும் வரும் போது மனிதன் கடவுளிடம் உதவிக்கு செல்கிறான். எருமைமாடு கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று கடவுளை வழிபடுவதை நாம் காண்பதில்லை. தனக்கு கிடைத்தவற்றுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஆனால் மனிதனோ இவற்றையெல்லாம் செய்கிறான் என்? தனக்கு இவற்றின் மூலம் மனோதிடமும், அமைதியும் கிடைக்கும் என்று தான். ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளும், அவற்றுக்கான தீர்வை தேடும் அவசியமும் அவனுக்கு இருப்பதால்தான்.

வழியில் ஒருவரை சந்திக்கிறோம். மரியாதைக்காக அவரை "எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்கிறோம். அவர் இப்படி யாராவது நம்மை கேட்க வேண்டும் என்று காத்திருந்தது போன்று, தன் வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். இவருக்கு மட்டும் தான் பிரச்சனைகள் இருக்கின்றனவா என்றால், இல்லை. மற்றவர்களுக்கும் உண்டு தான். ஆனால் அவர்களுக்கு தெரியும் இந்த கேள்வி ஓர் உபசாரத்திற்காக மட்டுமே கேட்கப்படுகிறது என்று. ஆதலால் அவர்கள் சௌக்கியம், நலம், நன்று என்று இப்படி எதாவது ஒன்றை சொல்லிவிட்டு தன் வழியே நடந்து விடுகிறார்கள். எல்லோர் மனமும் ஒரு போர்க்களம்; எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பது தான்.

மிருகத்தின் கவனமானது தன் உணவு, இனப்பெருக்கம் இவற்றில் மட்டுமே உள்ளது. இவற்றுக்காக அது தன் இயல்பின்படி செயல்படுகின்றன. மனிதனுக்கும் இவை உண்டு என்றாலும், இவற்றுடன் வேறொன்றும் அவனுக்கு உண்டு. அதாவது எந்த நேரத்தில் எப்படி செயல்படும் என்று அறிய முடியாத மனம் தான் அது. காலையில் எழுந்திருக்கும் போது உலகத்தின் சிகரத்தில் இருப்பதாக உணரும் ஒருவன், மாலை நேரத்திற்குள் அதல பாதாளத்தில் விழுந்த மாதிரி உணர்கிறான். ஒருநாள் மிகவும் நட்புடன் இருப்பவன், மறுநாள் எப்படி பேசினாலும் சண்டைக்கு வருகிறான். அப்பொழுது அக்கறையுடன் கூறப்படும் ஒரு சிறிய விமர்சனம் கூட அவனுக்கு குற்றச்சாட்டாகப் படுகிறது. மற்றவர்களுடன் அவனால் ஒரே சீரான விதத்தில் உறவுகொள்ள முடிவதில்லை காரணம், அவன் மனதின் மாற்றங்கள் தான். ஏன், இன்னும் சொல்லுவதென்றால், அவனுக்கு தன்னுடனேயே எப்படி உறவு கொள்ளுவதென்று, தெரிவதில்லை. இப்படி மாறிக்கொண்டே இருக்கும், போராடிக்கொண்டே இருக்கும் மனம் இந்த காலத்தின் கோளாறு என்பதில்லை அது எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. அது தொன்மையான பிரச்சனை! மனிதனின் அடிப்படையான பிரச்சனை!

நம் எல்லா தேவைகளையும், ஆசைகளையும் நிறைவேற்றி விட்டால், இந்த பிரச்சனை தீராதா? ஊஹும், எல்லா தேவைகளையும் ஆசைகளையும் நிறவேற்றி விட்டாலும் அடுத்தது என்ன செய்வது என்ற பிரச்சனை முளைத்து விடும். தினந்தோறும் தூங்கும்போது தற்காலிகமாக இந்த போராட்டத்திற்கு ஆரம்பித்து விடுகிறது. ஆதலால் மனம் உள்ளவரை - அது விழிப்பானாலும் சரி, கனவானாலும் சரி - இந்த போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்துடன் நம்மால் வாழ முடிவதில்லை சரி, போதை மருந்துகள், தூக்க மாத்திரை போன்றவற்றால் மனதை மரத்து போக செய்துவிடலாமே என்றால், அவற்றின் வேலை முடிந்தவுடன் மனம் விழித்தெழுகிறது. அத்துடன் போராட்டங்களும் எழுகின்றன. மனதை வேலை செய்ய விடாமல் மரத்து போக செய்து, அதனால் போராட்டங்கள் ஓய்ந்து விட்டன என்று நாம் நினைக்கும் கற்பனை உலகில் வாழ வேண்டுமா? அல்லது, இந்த போராட்டங்களை எதிர்த்து ஒரு தீர்வு காண வேண்டுமா? எது நமக்கு வேண்டும்? நம் மனம் நமக்கு வேண்டும் என்றால், இதில் உண்மையில் தேர்ந்தெடுப்பதற்கு ஏதும் இல்லை. ஆதலால் இந்த மனம் பற்றிய பிரச்னைக்கு ஓர் அடிப்படை தீர்வு காண வேண்டும்.

மாற வேண்டும் என்ற ஆசை...

மனம் மிக அரிய சக்திகள் படைத்தது. அதனால் தன்னை வருத்திக்கொள்ளும் சக்தியும் கொண்டது. இப்படி மனப்போராட்டங்கள் வருந்தும் மனிதன், நடுத்தெருவில் உட்கார்ந்து காதை பிய்க்குமாறு ஒலிக்கும் ஹாரன் சப்தத்தை சட்டை செய்யாமல், தன் உணவை அசைபோடும் எருமை மாட்டை பார்க்கிறான். அப்பொழுது "இந்த மாடு எவ்வளவு கொடுத்து வைத்தது?" என்று அவன் பொறாமைபடுவதில் ஆச்சர்யம் என்ன? எருமை மாட்டுக்கு தன்னை பற்றிய - நான் மகிழ்ச்சியாய் இல்லை என்ற இம்மாதிரியான - சுய உருவங்கள் self image இல்லை. ஆதலால், அது ஆனந்தமாக இருக்கிறது. எவ்வித மனப்போராட்டமும் இன்றி தன் இயல்பின்படி அது செயல்படுகிறது. நான் இப்படி இருக்கிறேன் இது சரியல்ல. நான் மாற வேண்டும் என்ற உணர்வெல்லாம் அதற்கு இல்லை. 'நான் இருக்கும் விதத்தில் நான் சந்தோஷமாக இல்லை' என்னும் 'காம்ப்ளெக்ஸ்' அதற்கு இல்லை.

மாற வேண்டும் என்ற ஆசை மனித இனத்திற்கே உரியது. புத்தி என்ற வலிமையினால் மனிதன் இந்த உலகத்தை பற்றி மட்டும் உணர்வு பெறுவதில்லை. தன்னை பற்றியும் உணர்வு பெறுகிறான். இந்த தன்னுணர்வு தான், self-consciousness தான் மிருகங்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. தன்னை பற்றிய உணர்வு இருக்கிறது என்பது மனிதனின் சிறப்பை காட்டுகிறது. ஆனால், 'நான்', 'நான்' என்று மனிதன் உணர்கிற அந்த 'நான்' என்பதை பற்றி இவன் கொண்டுள்ள உணர்வு 'நான்' பலவித குறைபாடுகள் உள்ளவன், நிறைவற்றவன் என்பது தான். இப்படி குறைபாடுகளுடன் உள்ளதாக எண்ணப்படும் 'நான்' என்பது சங்கீதத்தில் உள்ள சுருதி போன்றது. பாடகர் பாடும்போது ராகங்கள் மாறலாம், ஸ்வரங்கள் மாறலாம். ஆனால், சுருதி மாறுவதில்லை அவர் பின்னே உள்ள தம்பூராவின் ஒலி 'ஸ...ப...ஸ...' என்று விடாமல் ஒலிக்கிறது. அம்மாதிரியே மனிதன் எதை செய்தாலும், எதை நாடினாலும் அவன் மனதில் 'நான் நிறைவு பெற வேண்டும், நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதி மாறாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எப்படி இந்த 'ஸ...ப...ஸ...' மற்ற ஸ்வரங்களுடன் கூடி வெவ்வேறு ராகங்களாக வடிவெடுக்கிறனவோ, அது மாதிரியே எது குறைகிறது என்ற ராகங்கள் மாறலாம். ஆனாலும், 'நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதியுடன் சேர்ந்தே இவை ஒலிக்கின்றன.

இது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். 'நான் நிறைவடைய வேண்டும்' என்ற இந்த வேட்கையே மனிதனின் பல்வேறு சிந்தனைகள், ஆசைகள், குழப்பங்கள், போராட்டங்கள் இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. போராட்டம் என்றாலே தீர்வு காணும் வரை நிம்மதி கிடையாது. ஆதலால் போராட்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மனிதன் பல்வேறு விதங்களில் மாற்றத்தை விரும்புகிறான். மனிதனால் மாற முடியும், மாற்ற முடியும் என்பதே அவன் மாற்றத்தை விரும்புவதற்கான காரணமாகும்.
தொடரும்...

குறிப்பு:ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதிய பகவத்கீதையின் ஸராம்சம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.