Wednesday, July 10, 2013

மத மாற்றம் - வியாபாரமா?


"என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்" - இயேசு (யோவான் 2:16)


இந்த உலகத்திற்கு "அன்பை போதிக்க வந்தவர்" என்றும் "பாவிகளை ரட்சிக்க வந்தவர்" என்றும் "கடவுளுடைய குமாரன் என்றும்"  கிறிஸ்துவர்களால் அன்போடு வணங்கப்படுபவர் இயேசு கிறிஸ்து. இவர் "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு" என்றும் "பாவிகளை சிநேகியுங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்" என்றும் எந்த ஒரு எதிர்ப்பாய் இருந்தாலும் அதை அன்பாலேயே எதிர்க்க சொல்லி இருக்கிறார்". அப்படிப்பட்ட ஒருவர் தேவாலயத்தில்  வியாபாரம் செய்த வியாபாரிகளை கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டு பண்ணி தேவாலயத்திற்கு புறம்பே அவர்களை துரத்துகிறார். அன்பை போதிக்க வந்தவர் ஒரு சில நிமிடங்களில் அதை மறந்து வியாபாரம் செய்த வியாபாரிகளை சவுக்கையினால் விரட்டுகிறார். காரணம் தேவாலயத்தில் வியாபாரம் செய்தது அவரால் சகித்துக்கொள்ளவும், பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. இன்று வரை கிறிஸ்துவ ஆலயங்கள் வியாபார ஸ்தலமாக தான் உள்ளன. இன்று அவரையே வியாபாரமாக்கி விட்டார்கள். இப்படி அவரையே வியாபாரமாக்கியவர்களை எப்படி தண்டிப்பார் என்று தெரியவில்லை. மதம் பரப்புவது என்ற பெயரில் பலதரப்பட்ட வியாபார யுக்திகளை கையாளுகின்றனர் கிறிஸ்துவர்கள். அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.


கடந்த ஈஸ்டர் தினத்தன்று சென்னை மாநகர் முழுவதும் ஒரு சுவரொட்டியை காண நேர்ந்தது அதில் இயேசுவே என் பாவங்களை மன்னியும், இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும் என இப்படிப்பட்ட வசனங்கள் எழுதிய சுவரொட்டிகளை சென்னை மாநகரில் அங்காங்கே காணப்பட்டது. பிறகு இச்சுவரோட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டி இருப்பதை அறிந்தேன். மத மாற்றும் வியாபாரம் கொடி கட்டி பறப்பது இந்த சுவரொட்டிகளை பார்த்தாலே  நன்கு விளங்கும். காரணம் அச்சுவரொட்டிகளில் உள்ள ஒரு வசனம் "இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" என்பதே. அதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாஇல்லை கூடவே II நாளாகமம் 7:14 என்று ஆகம வசன குறிப்பு வேறு அந்த சுவரோட்டுகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பைபிளில் இருக்கும் வசனத்திருக்கும் அவர்கள் குறிப்பிட்ட இந்த வசனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதை நல்ல நேர்த்தியான வியாபார யுக்தி என்று சொல்லலாம் அல்லவா?.


"இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" 
(II நாளாகமம் 7:14)

                                                     

II நாளாகமம் என்ற ஆகமம் பைபிளில் எழுதியது கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பு. ஆனால் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைத்து 50 வருடங்கள் தான் ஆகிறது. இது எப்படி 2000 வருடங்களுக்கு முன்பு எழுதிய பைபிள் ஆகமத்தில் எப்படி இருக்கும். பைபிள் எடுத்து படித்து பார்த்தால் II நாளாகமம் 7:14 என்ற வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்." II நாளாகமம் 7:14


மேலே குறிப்பிட்ட உண்மையான வசனத்தை மறைத்து அதில் புதிய வசனமாக "இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" என்பதை குறிப்பிட்டு வியாபார கடவுளாக இயேசுவை மாற்றி உள்ளார்கள். இந்த கிறிஸ்துவர்களின் வியாபாரம் என்பது இந்த அளவிற்கு பைபிளில் இருக்கும் வசனத்தையே மாற்றி புது வசனங்களை புகுத்தி இந்த அளவிற்கு ஒரு பித்தலாட்டம் செய்து  இருக்கிறார்கள். 



அடுத்தது துத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஐநூறு ரூபாய் தாள்களில் "பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்" என்று அச்சடித்து விளம்பரம் செய்து மதத்தை பரப்புகிறார்கள். கேட்டல் எங்கள் இறைவன் மதத்தை உலகம் முழுவதும் பரப்ப சொன்னார் அதனாலேயே நாங்கள் இப்படி செய்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையாகவே இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இப்படி செய்கிறார்கள் என்பதே உண்மை. உண்மையாகவே எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அளவிற்கு வசனத்தை மாற்றியோ அல்லது ரூபாய் நோட்டுகளில் இறைவன் பெயரை அச்சடித்தோ மதத்தை பரப்புவது கிடையாது.






உலகத்திலேயே மிகவும் குறைவான மதிப்பு கொண்டது நாம் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரையே. அதை போலவே மற்றவர்களை குறை கூறுவதுமாகும். கிறிஸ்துவர்கள் தங்களிடம் உள்ள குறைகளையெல்லாம் மறைத்துவிட்டு மற்ற மதத்தினரை குறை கூறிக்கொண்டு தம் மதத்தை பரப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து "உலகமெங்கும் சுவிஷேசத்தை பிரசங்கியுங்கள்" (மாற்கு 16:15) என்று கூறிய  ஒரு வார்த்தைக்காக மதத்தை பரப்பும் கிறிஸ்துவர்கள். அவர் கூறிய மற்ற கருத்துக்களை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டு நடக்கின்றனர் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...
(தொடரும்...)