Thursday, November 28, 2013

ஆதி மனிதனும் ஆதி ஸ்திரீயும்...

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சகங்கள் அவனுக்கு தேவையான கனிவர்கங்களை  உணவாக அளித்தன. காட்டுமிருகங்கள் அவனை கண்டு நடுநடுங்கின. வானத்து பறவைகள் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான்.

ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, இனந்தெரியாத ஒருவகை தாபம், இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்தசக்தி அவனை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு அரிய பொருளை இதுவரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப்பற்றி கற்பனை செய்தான்; இரவில் அதைப்பற்றி கனவு கண்டான். "எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புத பொருளை - கர்பகக் கனியை - என்னை கவர்ந்திழுக்கும் காந்தத்தை எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?" என்று அவன் இதயம் ஏங்கி தவித்துக் கொண்டிருந்தது.

ஆதி மனிதனை படைத்த அதே சமயத்தில் இறைவன் அந்த ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்து சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்கு சுனை நீரும், தங்கி இருக்க மலைக் குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாக பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜூவாலை விட்டு அவளை எரித்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது. எந்த திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தடுத்து கொண்டிருந்தது.

வெயில் காலத்தில் ஒரு நாள் இயற்கை நியதி காரணமாக காட்டில் தீ மூண்டு நாளாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாக பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டு தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி, தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களை கவர்ந்திழுத்த சக்தி இது தான் என்பதனையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பி பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனி பிரிக்கக்கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கிவிட்டது என்பதை அறிந்து பரிபூரண திருப்தி அடைந்தார்.


குறிப்பு: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தில் குந்தவையும், வல்லவரையன் வந்தியதேவனும் சந்தித்து கொள்ளும் போது....