Wednesday, May 1, 2013

மதம் தோன்றிய விதம் - 2

இயற்கை வழிபாடு:
மதங்கள் என்பது காட்டுமிராண்டிதனமாக வாழ்ந்த மனிதனை நெறிமுறைபடுத்த உருவாக்கப்பட்டவையே... கடவுள் என்று யாரும் வந்து நான் இப்படி தான் இருப்பேன் என்று யாருக்கும் தரிசனம் தந்ததும் கிடையாது, யாரிடமும் பேசியதும் கிடையாது. இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி! மதங்கள்  அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே. இன்று இருக்கும் மதங்களில் அறிவியலும் மூடநம்பிக்கைகளும் கலந்தே இருக்கின்றன.

ஆதி கால மக்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தர்கள் குறிப்பாக அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த பூமி, மழை, வானம், அக்னி, மர வழிபாடு மற்றும் சூரிய வழிபாடு போன்ற வழிபாடுகளே நடைபெற்று வந்துள்ளது. நாளடைவில் கல் வழிபாடு தோன்றியது. இந்த கல் வழிபாடு என்பது பல விதமான வேறுபாடுகளில் இன்றும் கூட நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாது மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் ஒரு சிலது பயத்தின் அடிப்படையிலும் எழுந்தன. மிருக வழிபாடு ஆரம்ப காலங்களில் பயத்தின் அடிப்படையிலும் பிறகு மிருக வதை தடுப்பதற்கும் கூட  உருவாகி இருக்கலாம். 
*இடி,
*மின்னல்,

*மழை,

*சூரிய வழிபாடு,
*கொடிய விலங்குகள்  ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுக்கல் வழிபாடு: 

இந்த நடுக்கல் என்பது தமிழகத்தின் கிராமங்களில் ஊருக்கு வெளியிலேயோ அல்லது ஊருக்கு மத்தியிலேயோ வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான விசேஷ தினங்களில் அதற்கு படையல் வைத்து கும்பிடுவார்கள். இப்படிப்பட்ட நடுக்கற்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஜாத்திரை நடத்துவார்கள். இந்த ஜாத்திரை என்பது ஒரு வாரம், பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள் கூட இன்றும் பல கிராமங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. எனக்கு தெரிந்து திருப்பதியில் மட்டும் பதினைந்து நாட்கள் நடுக்கல்லிற்கு ஜாத்திரை நடத்துகிறார்கள். இந்த நடுக்கல் வழிபாடு மற்றும் அதற்கு ஜாத்திரை எதற்கு நடத்துகிறார்கள் என்பதை அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம். இந்த நடுக்கல் வழிபாட்டை சக்திக்கல் வழிபாடு என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு: 

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன. 

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு:  

நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.
* கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்
* தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர், 
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர். 

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம். நடுக்கல் பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில் காணலாம்.