Thursday, January 10, 2013

சமயங்களும் சம்பிரதாயங்களும் பாகம் - 1

மார்கழி மாத உண்மைகள்...





இந்து மதத்தில் பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் எதற்கு செய்கிறோம் எதனால் செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறார்கள் குறிப்பாக ராகு காலம் பார்ப்பது, எமகண்டம் பார்ப்பது, பூனை குறுக்கே வந்தால் வெளியில் செல்வதை தவிர்ப்பது இன்னும் பல சம்பிரதாயங்கள் இந்த இந்து மதத்தில் புதைந்து  கிடக்கின்றன. இந்து மதம் மட்டுமலாமல் இன்னும் ஒரு சில மதங்களில் எதற்காக இந்த விழாவை வருடாவருடம் செய்கிறோம், எதற்காக இந்த சடங்கு செய்கிறோம், என்றே தெரியாமல் செய்கின்றனர் மக்கள். இதற்கு ஒரு குட்டி கதை சொல்லி பதிவை தொடர விரும்புகிறேன்.


"துறவி ஒருவர் தன் சீடர்களுடன் தினமும் தியானம் செய்வது வழக்கம். இவர் தியானம் செய்யும்போதெல்லாம் ஒரு பூனை இவரை தொந்தரவு செய்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் இவர் தியானம் செய்யும் பொது அந்த பூனையை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு தியானம் செய்ய ஆரம்பிப்பார். சில வருட காலம் சென்றது, துறவியும் இறந்து விட்டார் பூனையும் இறந்து விட்டது. துறவியிடம் சீடனாக இருந்த ஒருவன் குரு ஆனான். இவன் தினமும் தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் ஊருக்குள் சென்று ஒரு பூனையை பிடித்து வந்து மரத்தில் கட்டிப்போட்டு தியானம் செய்ய ஆரம்பித்தான்."

இந்த கதையை போலவே இன்றும் ஒரு சில மதத்தை சேர்ந்தவர்கள் ஏன் செய்கிறோம் எதனால் செய்கிறோம் என்றே தெரியாமல் பல சடங்குகளும்,சம்பிரதாயங்களும் செய்கிறார்கள். ஒருவன் தன் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்ய வேண்டுகிறான். அவர்கள் மார்கழி மாதம் போன பிறகு தை மாதத்தில் பெண் பார்த்து நிச்சயம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார்கள். ஏன் என்று கேட்டால் மார்கழி மாதம் பீடை மாதம் என்றும் அதனால் இந்த மாதத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய கூடாதென்று சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் புது வீட்டில் குடி புகுவது, குழந்தைகளுக்கு பெயர் வைப்பது, வளைகாப்பு நடத்துவது மற்றும எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்ய மாட்டார்கள். கேட்டால் மார்கழி மாதம் பீடை மாதம் என்றும் இந்த மாதத்தில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாதென்பர்கள். உண்மையாக சொல்லப்போனால் காரணமே வேறாக இருக்கும்.

பொதுவாக நமது மக்களில் பலர் திரிபு விசயங்களை உண்மையென நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.அப்படி தான் மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெய்வ வழிபாட்டினால் மக்களுக்கு சந்தோசத்திலும், செல்வத்திலும் பீடுடைய மாதமாகவே  மார்கழி மாதம் இருந்தது. நாளடைவில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறியது.

மார்கழி மாதம் இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். இந்து மத சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பக்தி மார்க்கம் நிறைந்து உள்ள இந்த மாதத்திற்குச் சில விஷேசத் தன்மைகளைக் கொடுக்கிறது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழி என்று சொல்வதாகச் சொல்லப்படுகிறது. அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டுப் பஜனை செய்வது என்ற வழக்கம் ஆண்களுக்கு உரியதாக இருக்கிறது. பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வாசலில் கோலமிடுவது வழக்கம். இது இலக்கியங்களில் தை நீராடல் என்றும் மார்கழி நீராடல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.




இப்படியான மதப் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஏற்பாடுகளை கொஞ்சம் உற்று நோக்கினால் இதில் சில அறிவியல் தன்மைகள் இருப்பது தெரிய வருகிறது மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும் என்று கருத இயலும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத் தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக் கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சேர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும். 

இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது,  மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை. இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் எத்தனை பேர் கேட்ப்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.

இன்றைய நிலையில் மக்கள் அந்த விஷயங்களை எல்லாம் தங்களது அறியாமையாலும் அசட்டையாலும் மறந்து விட்டார்கள். இப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் புதைந்து கிடக்கிற உண்மைகள் நம்மால் புரிந்து கொள்ளப்ட வேண்டும். அதன் அறிவியல் தன்மைகளை நாம் உணர்ந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். கோயில்களுக்கு செல்லாவிட்டாலும்,  மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து தமக்கு பிடித்த கடவுளை தொழுது வந்தால் மனதிற்கும், உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்.

சரி மார்கழி மாதம் இந்துக்களுக்கு மட்டும் தான் விழாக்களா? மற்ற மதத்தவருக்கு இல்லையா? என்றால் ஆம் இதோ நானும் இருக்கிறேன் என்கிறது மார்கழி மாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்...

(தொடரும்...)

Thursday, January 3, 2013

திருவள்ளுவர் யாரை இறைவன் என்று குறிப்பிடுகிறார்?



"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு"





திருவள்ளுவர் எங்கள் மதத்தை சார்ந்தவரே என்று இந்து மதம், புத்த மதம், சமண மதம், ஜைன மதம் என்று பல மதத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள் அந்த வரிசையில் இப்பொழுது கிறிஸ்துவ மதம் சேர்ந்துள்ளது... 

பொதுவாக பார்த்தால் ஏன் திருவள்ளுவருக்கு இவ்வளவு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால், திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லி உள்ள கருத்துக்கள் எம் மதத்தை சார்ந்தவையே என்று பெருமை பாராட்டி கொள்ளவே அல்லாமல் வேறொன்றுமில்லை...

அப்படி பார்த்தால் எந்த மதத்திலும் சொல்லாத கருத்துக்களை கூட திருவள்ளுவர் சொல்லி உள்ளார் என்பதே உண்மை...

அவ்வளவு ஏன் கற்பனையில் வரையப்பட்ட அவரது உருவத்திற்கே வேட்டு வைப்பது போல் "மழுத்தாலும், நீட்டலும் தவறு" என்ற குறள் உள்ளது, அதாவது தலை முடியை மழுத்தாலும், தாடியை நீட்டலும் தவறு என்ற குறள் உள்ளது...


குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
"உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்."

மற்ற மதத்தினராவது பரவாஇல்லை கிறிஸ்துவர்கள் ஒரு படி மேலே சென்று தோமா தான் திருவள்ளுவருக்கே பாடம் சொல்லி கொடுத்தார், தோமா சொன்ன போதனையில் தான் திருவள்ளுவரே திருக்குறள் எழுதினார், திருவள்ளுவருக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை என்பது போல் சொல்கிறார்கள்.

ஆனால் வள்ளுவர்,
எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற இருப்பவர் இறைவன் என்ற இந்து மத கருத்தும், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்த மத கருத்தும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற கிறிஸ்துவ மத கருத்தும், ஒருவன் தன் வருமானத்தில் ஒரு சிறிய பங்கு விளம்பரமின்றி ஏழை, எளியவர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற முஸ்லீம் மத கருத்தும், பிற உயிர்களை கொள்ளாது வாழ்பவனுடைய வாழ்க்கையே சிறந்த அறம் என்ற ஜைன மத கருத்து என அனைத்து மத கருத்துக்களை கூறி உள்ளார்...

வள்ளுவர் இந்து, கிறிஸ்து, முஸ்லீம், புத்த, ஜைன மதத்தவரின் பொதுவான கருத்துகளை விளக்கியுள்ளார். திருக்குறள் தனிப்பட்ட மனிதனுக்கோ, மதத்திற்கோ, நாட்டிற்கோ அல்லாமல் நாடு, இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து மக்களாய்ப் பிறந்த அனைவருக்கும் எக்காலத்திற்கும் இயைந்த கருத்துகளைக் கூறுகிறது.

சரி திருவள்ளுவர் கடவுளாக குறிப்பிடுபவர் யார் என்று ஆராய்ந்தால் அதற்கு  முதல் அதிகாரம் அதாவது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் முதல் குறளே அதற்கு சாட்சி...

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு."


மேலே உள்ள குறளின் பொருள் என்னவென்றால் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது" என்பதே பல அறிஞர்களின் கருத்தாகும்.

ஆனால் திருவள்ளுவர் நேரடியாகவே இறைவனை குறிப்பிட்டு இருக்கிறார் "ஆதி பகவானை முதலாக கொண்டதே உலகம் என்று" இங்கு நான் ஆதி பகவான் என்று யாரை குறிப்பிடுகிறார் என்று அனைவருக்கும் தெரியும். ஆம் 

"சூரியனே"


சூரிய பகவானை முதலாக கொண்டதே உலகம் என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு காலத்தில் பல நாடுகளில் சூரிய பகவானை கடவுளாக வணங்கியது நாம் அறிந்ததே. இதற்கு சில விளக்கங்களை கொடுக்கிறேன்.


ஆதி என்பது சூரியனை தான் குறிக்கிறதா என பலருக்கு சந்தேகம் வரலாம். ஆம் அது சூரியனையே குறிக்கிறது என்பதற்கு உலகமே ஒன்றுபடக்கூடிய சில ஆதாரங்களை கூறுகிறேன்.

நம் தமிழ் மொழியில் வாரத்தின் முதல் நாளை குறிக்கக்கூடிய சொல் "ஞாயிறு"  என்பது அனைவரும் அறிந்ததே. சூரியனுக்கு ஆதவன், கதிரவன், ஞாயிறு, என்று பல பெயர்கள் தமிழில் உண்டு. ஞாயிறு என்ற சொல்லில் "ஞா" என்றால் நடுவில் தொங்கிகொண்டு என்பது பொருள். யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள் என்று பொருள். எனவே நடு நாயகமாக விளங்கும் சூரியன் மற்றைய கிரகங்களைப்பற்றிக் கொண்டுள்ளது. அவனின் பிடிதளர்ந்தால் உலகத்தின் கதியும் அதோகதிதான். எனவே சூரியனே வாரத்தின் முதல்வனாக திகழ்கிறான்.

தெலுகு மொழியில் நேரிடையாகவே வள்ளுவனுடைய வார்த்தை வாரத்தின் முதல் நாளை குறிக்கக்கூடிய சொல்லாக உள்ளது. அது தான் "ஆதி வாரம்" இங்கும் வாரத்தின் முதல்வனாக ஆதி (சூரியன்) என்பவன் திகழ்கிறான்.  ஹிந்தியிலும் கூட வாரத்தின் முதல் நாள் "ஆதிவார்" என்றே கூறுகின்றனர்.

இதை விட ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் உலக பொது மொழியாக திகழும் ஆங்கிலத்திலும் கூட வாரத்தின் முதல்வனாக சூரியனே திகழ்கிறான் "சண்டே" (SUNDAY). என்ன ஒரு உலக ஒற்றுமை பாருங்கள். இந்த ஒற்றுமை தற்செயலாக நடந்ததா இல்லை, அனைத்தும் கோர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை.

எனவே திருவள்ளுவர் "ஆதி பகவான்" என குறிப்பிடுவது முதல்வனான (ஆதியாகிய) சூரியனையே என்பது புரிந்து இருக்கும்.

இது மட்டுமல்லாமல் அகத்திய முனிவர் இறைவனை ஜோதியாய், ஒளியாய் என்று குறிப்பிடுகிகிறார், வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ் ஜோதியே  தனி பெரும் கருணை என இறைவனை ஒளியாய் கண்டுள்ளனர்.

  



சூரியன் என்றால் இயக்குபவன் என்பது பொருள். உலகம் தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும் காரணமானவன் சூரியன். உலக உயிர்கள் அனைத்தையும் அவனே வாழ வைக்கிறான். அவனால் ஒளியும் வெப்பமும் தோன்றுகின்றன. ஆதி மக்கள் கண் கண்டு வணங்கிய முதல் கடவுள் சூரியனே.



கோவலன் கொலையுண்ட போது கண்ணகி சூரியனைப் பார்த்து தாய்கறிச் செல்வனே! கள்வனோ என் கணவன் எனக் கேட்டதாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலை என்ற நூலில் ஏழு குதிரைகள் பூட்டிய ஒன்றைச் சக்கரத் தேரில் பயணிக்கும் உருவமுடையவனாக சூரியன் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

கால தேவனும் சூரியனே. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு இடைப்பட்ட காலம் ஒரு நாள் எனப்படுகின்றது. ஒரு நாள் சென்றால் நமது ஆயுளில் ஒரு நாள் கழிந்து விடுகின்றது. அதனால்தான் நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வான் அது உணர்வார்ப் பெறின் என்றார் வள்ளுவர்.

ரோமாபுரியில் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி சூரியனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டது. செளரம் சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயமாகும். புராணங்களிலும் இதிகாசங்களிலும் சூரியனைப் பற்றி பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. குந்திதேவியின் முதற் கணவன் சூரியன் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது.

எனவே திருவள்ளுவர் "ஆதி பகவன்" என கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளில் குறிப்பிடுவது முதல்வனாகிய சூரியனையே.




திருவள்ளுவர் எம் மதத்தை சேர்ந்தவரே என பெருமை பாராட்டி கொள்ளாமல், அவர் எழுதிய திருக்குறள்களின்படி நடக்க முயற்சிப்போம்...

வாழ்க வள்ளுவர்! வாழ்க அவர் பெருமைகள்!!

Wednesday, January 2, 2013

மாயங்களின் அறிவியலும், காலநிலை கணிப்புகளும்...



மாயன்கள்  - பிரமிக்க வைக்கும் பெயர் என்றால் அது மாயா தான்...

சில நாட்களுக்கு முன் (21.12.2012) மேலை நாட்டவர்களையே பயமுறுத்தியவர்கள் என்றால் அது மாயன்களாக மட்டுமே இருக்க முடியும்.

அந்தளவுக்கு அவர்களுடைய அறிவியலும், ஆராய்ச்சிகளும் இருந்திருக்கின்றன. சரி இவர்களை பற்றி பலபேர் பல கட்டுரைகள் எழுதி இருப்பார்கள். நான் ஒன்றும் புதிதாக ஒன்றும் சொல்லபோவதில்லை பழைய ஆராய்ச்சிகளே ஆனால் ஒரு சில படங்களுடன் விளக்க போகிறேன்.

பிரமிட் என்றாலே பிரமிப்பு தான் வரும். மாயங்களின் பிரமிடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.


மேலே இருக்கும் படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும். மாயன்கள் பலவித பிரமிட்களை கட்டி இருந்தார்கள்.

உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் இது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.

போஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று,போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும். பிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன,நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா அதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின் வயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை. சரி இந்த ஐந்து பிரமிடுகளை பற்றி பிறகு பார்ப்போம், கீழே இருக்கும் ஒரு பிரமிட் பற்றி ஒரு அதிசயத்தை பார்ப்போம்.




மற்ற பிரமிடுகளை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் தேதியும்  செப்டம்பர் 22ம் தேதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. “அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்” என்றா கேட்கிறீர்கள்?அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.



புரிகிறதா?...



பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் தேதியும்  செப்டம்பர் 22ம் தேதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். “அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்” என்று யோசிக்கிறீர்களா? உலகில் எந்த ஒரு இடத்திலும்,வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.

ஆச்சரியங்கள்!!!!!                                                                                  (தொடரும்...)