Tuesday, April 28, 2015

சாதிய கட்டமைப்பை உடைக்க முடியுமா? - 1


படிப்பறிவுள்ள இன்றைய காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் ஏன் அனைத்து இந்தியா மாநிலங்களிலும்  கூட சாதிய வன்கொடுமைகளும், சாதிய கலவரங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றன. இதனால் பல உயிர் இழப்புகளும், பல பிரச்சனைகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? எப்பொழுது தீரும் இந்த சாதிய வன்கொடுமைகளும் சாதிய கலவரங்களும் என்பதே தற்போது அனைத்து சமூக நலவிரும்பிகளும் எண்ணுவது.

இந்த சாதியத்தை எதிர்த்து பல்வேறு காலகட்டங்ககளில் பல்வேறு தலைவர்கள் போராடினார்கள் இன்றும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்க முடியவில்லை. இதற்கான காரணங்களை நாம் ஆராய தான் வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு தொழில் ரீதியாக பிரிக்கப்பட்ட இந்த பிரிவானது நாளடைவில் சாதி என்னும் விதையாக மாறி தற்போது மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்துள்ளது.
இந்த சாதிய வன்கொடுமைகளையும் கலவரங்களையும் தடுக்க அரசாங்கம் கலப்பு திருமணம், சமத்துவபுரம் இப்படி ஒரு சில முயற்சிகள் மேற்கொண்டு தான் வருகிறது. இருந்தாலும் தற்போது பெரிய விருட்சமாக வளர்ந்து இருக்கும் சாதிய கட்டமைப்பை உடைக்க இவை எல்லாம் முடியவில்லையே!!!
டாக்டர்.அம்பேத்கர் முதல் ஈ.வெ.ரா.பெரியார் வரை சாதியத்தை எதிர்த்து போராடினார்கள். ஆனால் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்க முடியவில்லை. எனவே  சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒரு சில சலுகைகளை அறிவித்துவிட்டு சென்றுவிட்டனர். "சாதி தான் சமுதாயம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்று  டாக்டர்.அம்பேத்கர் கூறி இருக்கிறார் என்றால் சாதிய ரீதியாக அவர் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருந்தால் அப்படி பேசி இருப்பார் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்...
சரி இருக்கட்டும். இந்த சாதிய வன்கொடுமைகளுக்கும், சாதிய கலவரங்களுக்கும், காரணமாக இருப்பது தீண்டாமை என்ற ஒரு விருட்சம். இந்த தீண்டாமைக்கு வேராக சாதி என்னும் கட்டமைப்பு உள்ளது. இந்த சாதி என்னும் கட்டமைப்பை இடித்து தரை மட்டமாக்க முடியுமா? என்பதை அடுத்த பதிவில் காணலாம்....