Wednesday, June 26, 2013

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - இறுதி பாகம்



சிதறுண்டவர்களின் நிலை...

மேலே கண்ட வரலாற்று நிகழ்வுகளில் சிதறுண்ட மக்களின் நிலை கவனிக்கப்படத்தக்கது. அவர்கள் சொந்த நிலங்களையும், செல்வங்களையும் இழந்து உணவுக்குகூட வழியின்றி இருக்க இடமின்றி எங்கும் திரிந்து வந்தனர். அவர்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும் தேவைப்பட்டது. அதே போல் குடியமர்ந்தவர்களுக்கு தங்களையும் தங்கள் செல்வங்களையும் அலைந்து திரியும் குறிப்பிட்ட நாடோடி கும்பல்களிடமிருந்து காத்துக்கொள்ள பாதுகாப்பு தேவைப்பட்டது.

இந்நிலையில் சிதறுண்ட மக்களும் குடியமர்ந்தவர்களும் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். சிதருண்டவர்கள் ஊருக்கு எல்லையில் தங்கியிருந்து குடியமர்ந்தவர்களை நாடோடி கொள்ளை கூட்டத்தாரிடமிருந்து பாதுகாப்பது எனவும் அதற்கு பதிலாக குடியமர்ந்தவர்கள் சிதறுண்ட மக்களுக்கு உணவு கொடுப்பது என்பதுமே அந்த உடன்பாடு. இதனாலேயே சிதறுண்ட மக்கள் ஊருக்கு வெளியில் தங்கி வசிக்க தொடங்கினர். சிதறுண்டவர்கள் தாழ்ந்தவராகவோ (அ) குடியமர்ந்தவர்கள் உயர்ந்தவர்களாகவோ கருதப்படவில்லை. ஆனால் சிதறுண்டவர்கள் தனி இனமாக திராவிடர்களாக இருந்தனர். குடியமர்ந்தவர்கள் வேற்று இனமாக [ஆரியர் மற்றும் திராவிடர்] கலப்பாக வாழத்தணப்பட்டனர். இப்படி தான் இன்றைய தீண்டப்படாத மக்களாக [தலித்துக்களாக] ஊருக்கு வெளியில் வைக்கப்பட்டனர். அவர்கள் சேர்ந்து வாழ்ந்த பகுதி தான் சேரி என அழைக்கப்படலாயிற்று. அவர்களுக்குள் எவ்வித ஜாதி பிரிவுகளோ அல்லது தீண்டாமை பழக்கமோ இல்லை. ஆனால் நிரந்தர குடிமக்களிடம் மட்டுமே ஆரிய சமூகத்தின் வர்ணாசிரம முறையும், ஜாதி பிரிவுகளும் வளர்ந்தோங்க தொடங்கின. ஆகா ஊருக்குள்  வசித்தவர்கள் நான்கு வர்ணங்களை உள்ளடக்கிய சதுர்வர்ணங்களாகவும்; ஊருக்கு வெளியே வசித்த சிதறுண்டவர்களே அவர்ணர்களாக ஜாதிக்கு அப்பாற்பட்டவர்களாக தலித் சமுதாயாமாக பிரிந்து நின்றனர்.


தீண்டாமை திணித்தல்...
பெளத்தத்திற்கும் பார்பனியத்திற்கும் இடையிலான போராட்டமே இந்திய சமூக வரலாறாக இருந்து வந்துள்ளது. அரசுகளும், பேரரசுகளும் இந்த பின்னணியிலேயே நிறுவப்பட்டு வந்துள்ளது. மேலாதிக்கத்தினை பெறுவதில் இவ்விரு தத்துவங்களுக்குமிடையே நடந்த போராட்டத்துடன் தான் தீண்டப்படாதோராகிய தலித் மக்களின் வரலாறும் இணைந்துள்ளது. தீண்டப்படாத மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமை கொடுமையும் அவர்களின் இழிவான வாழ்வு முறையும் இந்த போராட்டத்தின் விளைவாகும். பார்ப்பனியத்திற்கு எதிராக தொடர்ந்து பெளத்த மதத்தை கடைபிடித்ததாலும் பார்ப்பனியர்களும் மற்ற வர்ணத்தாரும் மாட்டிறைச்சியை உண்பதை கைவிட்ட பிறகும் தொடர்ந்து சிதறுண்டவர்கள் மட்டும் காலத்தின் கட்டாயத்தால் அதை உண்டு வந்ததாலும் இம்மக்கள் மீது வெறுப்பினை உமிழ்ந்து தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. பிரிந்து வாழ்ந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டது.

பார்ப்பனியர்கள் தீண்டத்தகாதவர்களை அசுத்தமானவர்களாக புறக்கனிக்கப்பட்டதாகத்தான் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் தீண்டப்படாத மக்கள் தான் பார்ப்பனர்களை என்றும் அசுத்தமானவர்களாக ஒதுக்கி வைத்திருந்தனர் என்பதே உண்மை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒரு பார்ப்பனனை தங்கள் பறசேரிக்குள் நுழையவிடுவதில்லை. அவன் வருகை அழிவின் அறிகுறி என்று நம்புகிறார்கள். பார்ப்பனர்களை அசுத்தமானவர்களாக கருதியே தங்கள் வீட்டு அர்ச்சகர்களாக கூட அவர்களை பஞ்சமர்கள் (அ) அவர்ணாக்கள் அழைப்பதில்லை. காரணம் சிதருண்டவர்கள் புத்த மதத்தினர் என்பதால் பார்ப்பனர்களை ஒதுக்கியே வைத்திருந்தான் என்பதே உண்மை. அதனால் தான் பார்ப்பனர்கள் திரும்பவும் ஆதிக்கம் பெற முயற்சித்து அவர்கள் மதத்தை தீவிரமாக பரப்பிய போதும் தொடர்ந்து சிதறுண்டவர்கள் இடையே பெளத்தவர்களாகவே விளங்கினர். அத்துடன் மாட்டிறைச்சி உண்பதையும் பார்ப்பனர்களின் வழியை பின்பற்றி கைவிடவில்லை. இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் இவர்களை புத்த மதத்தினர் என்று வெறுத்தனர். இவர்களுக்கு எதிராக அவமதிப்பையும் துவேஷத்தையும் பிரச்சாரம் செய்தனர். புத்த மதத்தை கைவிடவில்லை என்பதால் தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. தீண்டாமை புத்த மதத்தினருக்கும் பார்ப்பனர்களுக்கும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர்கள்? என்ற போட்டியால் ஏற்பட்டது.

முடிவுரை...
இந்தியாவின் பல பகுதிகளில் பெரும்பான்மையான தலித்துக்கள்:
தென்னிந்தியாவில் - ஆதிதிராவிடர்கள், ஆதிஆந்திரா, பறையர்கள், பள்ளர்கள்...
வட இந்தியாவில் - சாமார்கள்
மத்திய மேற்கு இந்தியாவில் - மாகர்கள்
பஞ்சாபில் - சுகுராக்கள் என இவர்கள் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் எந்த அளவிற்கு நமது பூர்வ வரலாறோடு தொடர்புடையவர்கள் என்பதை அறியலாம். ஆக இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிட மக்களாகிய தலித் மக்களே என்றும், அவர்கள் பூர்வீக இந்திய திருநாட்டின்  பெளத்தர்கள் என அயோத்தி தாச பண்டிதர் தமது தமிழ் மற்றும் மனித இன ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். அதனால் தான் அம்பேத்காருக்கு முன்னோடியாகவே தென்னிந்தியா பெளத்த சங்கம் துவக்கி பெளத்த நெறி பரப்பும் பணியினை ஆற்றினார். அம்பேத்காரும் தமது பூர்வ மதமான பெளத்தத்தில் தம்மையும் தமது இனத்தையும் இணைத்து வழிநடத்தி சென்றார்...

(முற்றும்...)

No comments:

Post a Comment