Thursday, January 23, 2014

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 5


நாடோடி வாழ்வும் நிரந்தர குடியிருப்பும்...

ஆதி கால மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தனர். அவர்களின் சொத்து கால்நடைகளே. இவர்கள் கூட்டம் கூட்டமாக கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை தேடி இடம்பெயர்ந்தனர்.

கால்நடைகள் மட்டுமே செல்வமாக கொண்ட மக்களுக்கு புதிய செல்வமாக நிலம் கிடைத்தது. அதனை உழுது பயிரிட்டனர். ஆகவே இடம் மாறுவது நின்று நிலையான வசிக்கும் இடங்கள் அமைத்து வாழத்தொடங்கினர். இந்த நிரந்தர குடியிருப்புகள் நாகரீக காலத்தை குறிக்கிறது.

எல்லா கூட்டத்தினரும் ஒரே சமயத்தில் நிரந்தரமாக வசிக்க தொடங்கவில்லை. சில கூட்டத்தினர் நிரந்தர குடியமர்ந்தபோது வேறு சில கூட்டத்தினர் நாடோடிகளாகவே திரிந்தனர். இப்படித்தான் ஒருபுறம் நாகரீகத்தால் உயர்ந்த திராவிடர்கள் நிரந்தர குடியிருப்புகள் அமைத்து உழவு தொழில் செய்து வாழ்ந்து வந்தபோது ஆரியர்கள் நாடோடி கூட்டங்களாகவே சுற்றி திரிந்து வந்தனர். நாடோடி கூட்டத்தினர் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். காரணம் மற்றவர்களின் கால்நடைகளை திருடுவது; மாதர்களை கடத்துவது; மற்றவர்களின் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்ப்பது மட்டுமே செய்து வந்தனர். ஆரிய நாடோடிகள் நீண்ட இடைவேளைக்குப்பின் இருபெரும் கூட்டங்களாக வந்ததாக தெரிகிறது. முதல் கூட்டம் மேய்ச்சலுக்காக சிந்துவெளியில் நுழைந்தபோது அங்கே நிரந்தர குடியிருப்புகளாக செல்வசெழிப்போடு வாழ்ந்த திராவிடர்களை கண்டபோது, அவர்களின் செல்வங்களை கண்டு பொறாமை கொண்டனர்.

சிதறுண்டவர்கள் (SCATTERED PEOPLE)...

நாடோடிகளுக்கு வெறும் கால்நடைகளே சொத்துக்கள் ஆனால் ஓரிடத்தில் குடியமர்ந்து வாழ்ந்த இம்மக்களுக்கு கால்நடைகளுடன் தானியங்களும் சொத்துக்களாக இருந்தன. ஆகவே அந்த சொத்துக்களை கொள்ளையிட நாடோடி கூட்டங்கள் நிரந்தர குடியிருப்போரை தாக்கி தோற்கடித்து சிதறடித்தனர். சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்த அம்மக்கள்[திராவிடர்கள்] சிறு சிறு கூட்டங்களாக சிதறுண்டவர்களாக எல்லா திசைகளிலும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருந்தனர். இந்த சண்டைகளும், வெளியேற்றங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருந்தன. சில நிகழ்வுகளில் நாடோடி கூட்டங்களுக்கும், தோற்கடிக்கப்பட்டு களவாடப்பட்ட மாதர்களுக்கும் கலப்புகளும் நிகழத்தொடங்கின. மேய்ச்சலுக்கு வந்த நாடோடி கூட்டங்களும் காலப்போக்கில் நிரந்தர குடியிருப்புகளில் வசிக்க தொடங்கினர். நீண்ட கால இடைவெளியில் இந்நிலையில் மேலும் மேலும் வந்து கொண்டிருந்த பெரும்கூட்டமாக வந்த நாடோடிகள் நிரந்தர குடியிருப்புகளை தாக்குவதும் பின்பு தாக்கியவர்களே நிரந்தரமாவதும் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஆகவே இந்நிலையில் 3 விதமான [கூட்டங்களை] மக்களை காண்கிறோம்.
1. தோல்வியுற்று சிதறுண்டு அலைகிற மக்கள்
2. நிரந்தரமாக குடியமர்ந்தவர்கள் [வெற்றி பெற்ற ஒரு நாடோடி கூட்டம்]
3. இன்றும் நாடோடிகளாகவே அலைந்துக்கொண்டு திடீர் திடீர் என தாக்குதல் நடத்தும் கூட்டம்.

(தொடரும்...)

No comments:

Post a Comment